அருள்மிகு நாகராஜா கோவில், கன்னியாகுமரி
அருள்மிகு நாகராஜா கோவில், கன்னியாகுமரி
அருள்மிகு நாகராஜா கோவில்,கன்னியாகுமரி

வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒரு திருக்கோயில் நாகர்கோயில் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் ஆகும்.

பாரத திருநாட்டில் நாக வழிபாட்டிற்காக கோயில்கள் பலவிருந்தாலும் நாகத்தின் பெயரையே தனதாகக் கொண்ட நாகர்கோயிலைப் போன்று சிறப்பு மிக்கது வேறில்லையெனலாம். இந்தியத் தாயின் பாதக்கமலமான குமரி முனையிலிருந்து பன்னிரண்டு கல் வடக்கே அமைந்துள்ளது இந்நகரம். இந்நகரின் பெயர் வரக் காரணம் அதன் நடுவில் அமைந்துள்ள ஐந்து தலை நாகராஜா கோயிலை வைத்துதான் என்பது இதனை வலியுறுத்தும். இக்கோயிலை சூழ்ந்துள்ள பச்சை பசேலென வயல்களும் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும் பூத்து குலுங்கி நிற்கும் பூஞ்சோலைகளும் காண்போர் மனத்தைக் கவர்ந்திழுக்கின்றது. இவ்வாறு இயற்கை அன்னை களி நடனம் புரிந்து இங்கு வருகை தருகின்றவர்களுக்கு அமைதியூட்டுகிறாள்.

கோயில் பூந்தோட்டத்திலுள்ள நாகப்பூவை நாகராஜாவின் உருவக் குறியீடாகக் கருதுகின்றனர். கோவிலையும் அதனைச் சார்ந்த தோட்டங்களையும் நாகங்கள் காவல் புரிகின்றன என்பது ஐதீகம். கோயிலைச் சுற்றிலும் நாகப்பாம்புகள் நிறைந்திருந்தாலும் இவ்வட்டாரத்தில் பாம்பு கடித்து இறந்ததாக சான்றுகள் எதுவும் இதுவரை கிடையாது. இச்சிறப்பினை உலக மதங்களின் கலைக் களஞ்சியம் உறுதிப்படுத்துகின்றது .சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் குளத்தினருகே இரண்டு தலை நாகமொன்று கிடைத்தது குறிப்பிட வேண்டியது. இக்கோயிலைச் சூழ்ந்துள்ள நாகச் சிலைக்கு கணக்கே கிடையாது. உட்கோயிலின் வாசலில் படமெடுத்த கோலத்தில் அமைந்துள்ள இரு பெரிய ஐந்து தலை நாகங்களின் சிலைகள் இங்கு வருகின்றவர்களைக் கவராமல் இருக்க முடியாது.

மூலவரான நாகராஜாவை தவிர்த்து சிவன் வாயு வடிவத்திலும் திருமால் அனந்த வடிவிலும் உள்ளனர். கோயில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்களான பார்சுவ நாதரும் மகா வீரரும் தவக்கோலத்தில் நின்றும் அமர்ந்தும் உள்ளனர். கோயிலின் முன் வாயிலில் நேப்பாளத்து புத்தமத விகாரத்தை நமக்கு நினைவூட்டுகின்றது. இவ்வாறு இக்கோயில் சைவம், வைஷ்ணவம், சமணம், பெளத்த மதம் இந்நான்கு மதக் கோட்பாடுகளின் கூட்டுருவமாக நமக்கு காட்சியளிக்கின்றது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மூலஸ்தானத்தின் பின்னால் தொழு நோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஓட வள்ளி என்ற ஒரு கொடி படர்ந்திருந்தது என்றும், நாளடைவில் அக்கொடி அழிந்துவிட்டதாகவும் அக்கொடியை திரும்ப நட்டு வளர்க்க முயற்சித்தும் இயலாது போய் விட்டதாகவும் கூறப்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்கள் இந்த ஓட வள்ளி இலையினை பிரசாதமாகப் பெற்று வந்ததாகவும் தெரிகிறது ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு சுவையுடனிருக்கும் என்றும் அவர்கள் கூறக் கேட்கலாம்.

இங்குள்ள மூலஸ்தானத்தில் மேற்கூரை ஓலை வேயப்பட்டதாக இருப்பது வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத தனிசிறப்பாகும். மேலும் நாகராஜா அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவேயிருப்பது குறிப்பிடத்தகது. அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணே முக்கியப் பிரசாதமாகும். இது ஆறு மாதம் கருப்பு நிறமாகவும் எஞ்சிய நாட்களில் வெள்ளை நிறமாகவும் இருந்து வருகிறது. எவ்வளவோ காலமாக எடுத்தும் அந்த மண் குறையாமலிருப்பது அதிசயக்கத் தக்க பேருண்மையாகும். நாகராஜனை வணங்குகின்றவர்கள் நோய் நொடியின்றி நலமெல்லாம் பெற்று வாழ்வர் என்பதும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில சரும ரோமங்களை நாகராஜனைத் தினமும் தொழுவதால் மறைந்து போகிறது என்பதும் இங்குள்ளோர் நம்பிக்கை. இக்கோயில் தினமும் ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் திரள் திரளாக வந்து வணங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இவ்வாலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அந்நாட்களில் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் இங்கு வந்து பால், உப்பு, நல்ல மிளகு, மரபொம்மைகள், இவைகளைக் காணிக்கைகளாக கொண்டு வந்து நாகராஜனை பயபக்தியுடன் வணங்கி செல்வர். பிற மதத்தவர்களும் இங்கு காணிக்கை செலுத்துவதுண்டு. நாக தோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணிய இடமாக விளங்குகின்றது.

இக்கோயில் வேறுபட்ட நான்கு மதக் கோட்பாடுகளை ஒன்று சேர்க்கும் சின்னமாகத் திகழ்கிறது. தற்போது இம்மாநிலத்திலிருந்து மட்டுமின்றி பாரத நாட்டின் பல பகுதியிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து தங்கள் குறைகளைத் தீர்த்து கொள்ளும் திவ்ய ஸ்தலமாக இது விளங்குகின்றது. இவ்வாறு வணங்கி செல்வோர் எல்லா நலங்களும் பெற்று மன அமைதியுடன் வாழ்கின்ற காரணத்தால் இவ்வாலயத்தின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மேலும் மேலும் வந்து குவிகின்றனர்.

இதர சேவைகள்

நன்கொடை

Donate Now

அன்னதானம்

Donate Now

பூஜை

Viewing

திருப்பணி

Booking Now

திருக்கோவில்கள்